|
பஹாவுல்லா இறைவன் மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் விதம் | |
|
இறைவன் என்பவர் யார்? அவரை நாம்
எப்படி அறிந்து வழிபடுவது? அவர் ஆவியின் சாரமா அல்லது வஸ்துவினால் ஆனவரா?
எத்தனை கடவுள்கள் இருக்கின்றனர்? ஏன் உலகில் இத்தனை மதங்கள்? ஆயிரம் ஆயிரம்
வருடங்களாக மக்கள் இவற்றையும் இவை போன்ற பல கேள்விகளையும் கேட்டு
வந்துள்ளனர். இதற்கு தகுந்த பதிலை பஹாய் சமயம் இவ்வாறு
வழங்குகின்றது: இறைவன் ஒருவரே உள்ளார். ஆனால் அவர் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு மர்மமாக இருப்பதால் மனிதர்கள் அவரை வர்ணிக்க இயலாமல் இருக்கின்றனர். நாம் எல்லோரும் அவருடைய படைப்புகள். ஆனால் நம்மைப்போல் இறைவன் படைக்கப்பட்டவர் அல்ல. அவரைப்பற்றிய நம்முடைய எந்த சிந்தனையும் அவரது மெய்மையின் அருகாமையை எல்ல முடியாது. அவர் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட பரம்பொருளாக வீற்றிருக்கின்றார். அப்படியானால் நாம் அவரை எவ்வாறு அறிந்துகொள்வது? இறைவன் மனிதர்களோடு தொடர்பு கொள்ள தாமே நேரில் வருவதில்லை. சூரியன் என்னதான் பூமிக்கு வேண்டிய வெப்பம் ஒளி ஆகியவற்றை வழங்கினாலும் அது பூமி வரை கீழிரங்கி அதை செய்வதில்லை. அவ்வாறு அது செய்வது உயிரினங்களை அழித்துவிடும். அதுபோலவே இறைவனும் தமது படைப்புக்களுக்குத் தேவையானவற்றை தாமே நேரே வந்து வழங்குவதில்லை. மனிதனுக்குத் தேவைப்படும் வழிகாட்டலை அவர் தமது அவதாரங்கள் மூலமாக வழங்குகிறார். இந்த அவதாரங்கள் அனைவரும் பௌதீக ரீதியில் சாதாரன மனிதர்களே. ஆனால், ஆன்மீக ரீதியில் அவர்கள் அனைவரும் பரம்பொருளான இறைவனின் அம்சங்களாவர். பலராக இருந்த போதிலும் அவர்கள் அனைவரும் மூல நிலையில் ஒருவரே ஆவர். அதவாது காலை, மதியம், மாலை ஆகிய வேளைகளில் காணப்படும் சூரியன் வெவ்வேறு விதமான தோற்றத்தை அளித்தாலும், காணப்படுவது ஒரே சூரியன்தான் என்பது போலாகும். அதே போன்றே தெய்வ அவதாரங்கள் ஒவ்வொருவரும் காலம், மக்கள், இடம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தங்களுடைய போதனையை, ஒளியை அளிக்கின்றனர். இது இறைவன் மனிதனுக்கு அளித்திருக்கும் வாக்குறுதியாகும். அவர் என்றென்றும் நமக்கு வழிகாட்டிக்கொண்டே இருப்பார். இது இறைவன் மனிதனோடு ஏற்படுத்திக்கொண்டுள்ள பூர்வ ஒப்பந்தமாகும். இறைத்தூதர்கள் இறைவன் சமார் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மனிதனுக்கு தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றார். தமது அவதாரமாக ஒரு மனிதரை சிருஷ்டித்து பூமிக்கு அனுப்புகின்றார். அவதாரங்கள் தோன்றி மனிதனுக்கு புதிய போதனைகளை அளிக்கின்றனர், புதிய சமயம் ஒன்றை தோற்றுவிக்கின்றனர். ஆனாலும் இவர்கள் அனைவரும் பூமிக்கு கொணர்வது ஒரே சமயமாகிய இறைவனின் சமயத்தையே. உருவத்தில் சமயங்கள் வேறுபட்டாலும் சாரத்தில் அவையாவும் ஒன்றே. ஆயிரமாயிரம் கண்ணாடிகளை சூரியனின் முன் வைத்தாலும் அவையனைத்திலும் காணப்படுவது அந்த ஒரே சூரியனின் ஒளியே. சமயங்கள் அனைத்திலும் வெளிப்படுவது இறைவனின் உண்மையே. பஹாய் புனித வாசகத்திலிருந்து: "இந்த புனிதமான "கண்ணாடிகள்," இந்த
பூர்வீக மகிமைகொண்ட ஒளி ஊற்றுகள் ஒவ்வொருவரும், இந்த விஸ்வம் முழுமைக்கும்
கதிரவனாக விளங்குபவரை வெளிப்படுத்துபவர்கள், அவரது சாரம் மற்றும் இறுதி
நோக்கமும் ஆவர். அவரிடம் இருந்தே இவர்கள் அறிவும் சக்தியும் அடைகின்றனர்,
அவரிடம் இருந்தே தமது செங்கோலைப் பெறுகின்றனர். அவர்கள் திவ்விய அறிவின்
பொக்கிஷங்கள், தெய்வீக விவேகத்தின் வைப்பிடங்கள். அந்தமில்லாத ஓர் அருள்
அவர்கள் வாயிலாகப் பாய்கின்றது மற்றும் மங்காத ஒளி அவர்கள் மூலமாக
வெளிப்படுத்தப்படுகின்றது.
இக்கால தூதரான பஹாவுல்லா பற்றிய சுருக்கமான வரலாறு பஹாவுல்லா 1817ல், பாரசீகத்தின் தெஹரான் நகரில், நவம்பர் 12ல் ஓர் உயர் குடும்பத்தில் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்த போது எப்போதும் அமைதியாகவும் அழாமலும் தமது பெற்றோரை வியப்பில் ஆழ்த்தினார். அவருக்கு 5 வயதானபோது அவரது தந்தாயார் பஹாவுல்லா உலகம் முழுவதும், எல்லா மக்களுக்கும் போதகராக விளங்குவதாக கனவு ஒன்று கண்டார் இறைவனின் அவதாரங்கள் பள்ளி சென்று
பயின்று அறிவு பெறுவதில்லை. அதே போன்று பஹாவுல்லாவும் முறையாக பள்ளி சென்று
கல்வி பயின்றதில்லை. ஆனால், அவர் இளைஞராக இருந்த போதே மத குருக்களுக்கும்
கல்விமான்களுக்கும் இறைவனின் இரகசியங்களைப் பற்றி போதித்தார். தமது அன்பு,
பகுத்தறிவு மற்றும் விவேகத்தினால் மக்கள் மனதில் இடம்
பிடித்தார். 1844ல் ஷிராஸ் நகரில் சையிட் அலி முகமட் அல்லது "பாப்" எனப்படும் இளைஞர் ஒருவர், தம்மை ஓர் இறை அவதாரம் எனப் பிரிகடணப்படுத்திக் கொண்டார். தம்முடைய நோக்கம் தமக்குப் பின்னால் வரவிருக்கும் மற்றொரு மாபெரும் இறைத்தூதரின் வருகையை அறிவிப்பதே என தெரிவித்தார். இந்த பாப் என்பாரை பஹாவுல்லா தாமே முதலில் அறிந்து ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு நடந்த சில முக்கிய சமய ரீதிதியிலான சம்பவங்கள், பாரசீக நாட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கின. இந்தப் பிண்ணனியில் பாப் அவர்கள் 750 இராணுவ வீரர்களின் தோட்டாகளுக்கு இறையாக்கப்பட்டார். பஹாவுல்லா பாப் அவர்களின் மற்ற சீடர்களும், பெரும் கொடுமைகளுக்கு உள்ளாகி, அதில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களையும் இழந்தனர். பஹாவுல்லாவும் கைது செய்யப்பட்டு, கல்லால் அடிக்கப்பட்டு, "பாஸ்டினாடோ " எனும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். பிறகு தெஹரான் நகரிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற "சிய்யாச்சால் எனும் பாதாளச் சிறைக்குள் தள்ளப்பட்டு கொடும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார். சுமார் 4 மாதங்கள் இந்தச் சிறையில் அவர் இருந்தார். இருள் சூழ்ந்த இந்தப் பாதாளத்தில்தான் பாப் அவர்களால் வாக்களிக்கப்பட்ட அவதாரம் தாமே என்பதை அவருக்கு புனித ஆவி அசரீரியான ஒரு புனித மங்கையின் உருவத்தில் தோன்றி உணர்த்தியது. இதன் பிறகு பாரசீகத்தின் இரஷ்ய நாட்டுப் பிரதிநியின் தலையீட்டினால், பஹாவுல்லா குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு, விடுவிக்கவும் பட்டார். விரும்பினால் அவருக்கு இரஷ்யாவில் அடைக்கலம் தருவதாகவும் இந்தத் தூதர் கூறினார் ஆனால் பஹாவுல்லா எல்லாம் இறைவன் சித்தம், எனக் கூறி பாக்தாத் நகருக்கு நாடு கடத்தப்பட சம்மதித்தார். இந்தச் சிறைச்சாலை வாசம் பஹாவுல்லாவின் திருமேனியில் ஏற்படுத்திய வடுக்கள் அவர் விண்ணேற்றம் அடையும் வரை நிலைத்திருந்தன. சிறைச்சாலையில் பட்ட துன்பங்கள் போதாதென, காடு மலைகளையெல்லாம் கடும் பனியிலும் குளிரிலும் கடந்து பாக்தாத் சேர்ந்தார். அதன் பிறகும் அவரது எதிரிகள் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை, பாக்தாத்திற்குப் பிறகு துருக்கி எனவும் அதன் பின் பாலஸ்தீனம் எனவும் அவர் நாடு கடத்தப்பட்டார். அப்போது பாலஸ்தீனாகவும் இப்போது இஸ்ரேல் எனவும் பெயர் பெற்றிருக்கும் நாட்டிலேயே அவர் தமது மீதமிருந்த வாழ்நாட்களை கழித்தார். பஹாவுல்லா தாம் இறை அவதாரம் என அறிவித்தது 1863-இல் பஹாவுல்லா பாக்தாத் நகரை விட்டு துருக்கி நாட்டிற்கு பிரயாணம் செய்யும் வழியில் டைகிரிஸ் நதிக் கரையில் 'ரித்வான்' எனப்படும் பூங்காவில் 12 நாட்கள் தங்கினார். இங்கு அவர் நுழைந்த முதல் நாள் அன்று அவர் தம்முடைய இறைத் தூதர் எனும் ஸ்தானத்தை பகிரங்கமாக உலகிற்கு அறிவித்தார். உலகில் ஒரு புதிய சமயம் தோன்றிவிட்டது, புதிய கோட்பாடுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பஹாவுல்லாவின் ஆன்மீக போதனைகள் மனிதனை இறைவனின் அருகாமைக்கு வழிநடத்திச் செல்ல சக்தி வாய்ந்தவை மற்றும் அவர்தம் சமுதாய போதனைகள் மக்களை ஒற்றுமை படுத்தக்கூடியவை. பஹாவுல்லா, உலகில் இனி இறைவனின் ஆட்சியே நடக்கும் என அறிவித்தார். உலகின் அரசர்களுக்கும் ஆளுனர்களுக்கும் அறிவித்தது அடுத்த சில வருடங்களில் பஹாவுல்லாவின் புகழ் பரவத் தொடங்கியது. அவர் உலகின் அரசர் மற்றும் ஆளுனர்களுக்கு தமது இறைத்தூதர் நிலையைப் பிரகடனப்படுத்தி, உலகில் ஒற்றுமை நிலவ உழைக்கும்படி அவர்களை அழைத்தார். இறைவனின் போதனைகளுக்கு அவர்கள் செவிசாய்க்காமல் தங்கள் மனம் போல் நடந்தார்கள் என்றால் உலகில் அழிவும் அராஜகமுமே மிஞ்சும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் யாருமே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சில எளிய தூய உள்ளம் கொண்ட சாதாரன மக்களே அவரை ஏற்று உலகம் முழுவதும் அவர் செய்தியை பரவச் செய்தனர். பஹாவுல்லா பட்ட துன்பங்களும் கொடுமைகளும் பஹாவுல்லா செல்வச் சீமானாகப் பிறந்தாலும், இறுதியில் தமது செல்வம் அனைத்தையும் இழந்து தமது குடும்பத்தாரோடு நாடு கடத்தவும் பட்டார். அவர் முதன் முதலில் அடைபட்ட 'சியாச் சால்' சிறை ஒரு சிறையே அல்ல. நீர் தேக்கி வைக்க பயன்படுத்தப் பட்ட ஒரு பாதாள அறை அது. உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே வழிதான் இருந்தது. இருள் சூழ்ந்த அந்த அறையில் சேறும், துர்நாற்றமும் வர்ணிக்க முடியாதவை. அங்கு பலவித கைதிகள் அடைபட்டிருந்தனர். பலர் உடுக்கத் துணி கூட இல்லாமல் இருந்தனர். பஹாவுல்லாவின் கழுத்தில் 20 மற்றும் 50 கிலோகிராம் எடையுள்ள இரண்டு சங்கிலிகள் ஒன்று மாற்றி ஒன்று போடப்பட்டன. இதன் விளைவாக அவர் கழுத்துக் கூன் விழுந்து போனார். சங்கிலிகள் அவர் தோள் பட்டையை அழுத்தி வெட்டி எழும்பைத் தொட்டன. இளைய வயதினாரக இருந்த பஹாவுல்லா அந்த அறையில் 4 மாதங்கள் அடைபட்டு, தலை முடியெல்லாம் நரைத்த நிலையில் முதிய தோற்றத்துடன் வெளிய வந்தார். இறைத்தூதர்கள் நிலையெல்லாம் இதுவே ஆகும். பஹாவுல்லாவின் வாசகங்கள் பஹாவுல்லா தம் வாழ்நாளில் எழுதியவை அனைத்தையும் ஒன்று சேர்த்தால் சுமார் 100 நூல்களாக ஒன்று சேர்க்கலாம். அவற்றில் பெரும்பாலும் இன்னும் மொழிபெயர்க்கப்படாமலேயே உள்ளன. அவர் மனிதர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களைப் பற்றியும் எழுதினார். மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமான எல்லாக் கேள்விகளுக்கும் அவர் வாசகங்களில் பதில் காணலாம். பஹாய் சமயத்தின் அதி புனித நூலான 'கித்தாப்-இ-அக்தாஸ்' எனும் நூலை வெளியிட்டார். பஹாவுல்லாவின் மறைவு பஹாவுல்லா தமது குடும்பத்தினரோடு துருக்கிக்கும் பிறகு 'ஆக்கா',அதாவது தற்போதைய இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு துறைமுகப் பட்டினத்திற்கு நாடு கடத்தப்பட்டார். இந்த 'ஆக்கா' அன்றைய ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் குற்றவாளிகளுக்குச் சிறை நகராக விளங்கியது. 'சியாச் சால்' சிறையைவிட இந்த 'அக்கா' நகரும், சிறையும் படுமோசமானவை. சுருங்கச் சொன்னால், அன்றைய வழக்குப்படி, ஒரு பறவை 'அக்கா' நகரின் மேல் பறந்தால், அது அடுத்த கனமே சுருண்டு மடியும் என்பது! இந்தச் சிறையில் பஹாவுல்லா அடைபட்ட முதல் மூன்று நாள் உண்ண உணவின்றி தமது குடும்பத்தாரோடு அல்லற்பட்டார். காலப்போக்கில் அரசாங்கத்தின் பிடி சிறிது தளர்ந்து அவர் நகருக்கு வெளியே சிறிய வீடு ஒன்றில் தங்க அனுமதிக்கப்பட்டார். 1892ம் வருடம், மே மாதம் 29ம் தேதி அதிகாலை 3.00 க்கு பஹாவுல்லா இந்த உலக வாழ்வை நீத்து இறைவனடி சேர்ந்தார். அவர் மறைவை அவர் மூத்த மகனாகிய அப்துல் பஹா, "பஹா சூரியன் அஸ்தமித்துவிட்டது" எனத் தந்தி மூலம் துருக்கி சுல்தானுக்குத் தெரியப்படுத்தினார். பஹாவுல்லா, தமக்குப் பிறகு தமது மகனான அப்துல் பஹாவை உலக பஹாய் சமூகத்திற்கு தலைமை ஏற்க நியமித்தார். அப்துல் பஹா மூலம் பஹாய் சமய போதனைகள் அமெரிக்க நாடுவரை பரவி, தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளன. |
![]() பஹாவுல்லாவின் நினைவாலயம்
பஹாவுல்லாவின் நினைவாலயம்
பஹாவுல்லாவின் பூர்வீக இல்லம்
பஹாவுல்லாவின் தந்தையின் வீடு
பஹாவுல்லா முதன் முதலில் சிறைவைக்கப்பட்ட பாதாளச் சிறையான சியாச்-சாலின் இன்றைய தோற்றம்
பஹாவுல்லாவின் பூர்வீக இல்லத்தின் வேறு சில காட்சிகள்
ஏட்ரியநோப்பளில் உள்ள பஹாவுல்லாவின் இல்லங்களில் ஒன்று
உலக அரசர்களுக்கும் ஆளுனர்களுக்கும் பஹாவுல்லா நிருபங்கள் அனுப்பினார்
ஆக்கோ நகரில் உள்ள இந்த சிறைச்சாலையில் பஹாவுல்லா 2 வருடங்கள் சிறைப்பட்டிருந்தார்
பஹாவுல்லாவின் நினைவாலயம் - வானிலிருந்து
|