Û

பஹாவுல்லாவின் மறைமொழிகள்

ஆவியின் மைந்தனே!
எமது முதல் அறிவுரை இதுவே: தூய்மையும், அன்பும், பிரகாசமும் நிறைந்த உள்ளத்தினைக் கொண்டிருப்பாயாக, அதனால் தொன்மையும், அழியாத்தன்மையும் கூடிய என்றும் நிலைத்திருக்கக்கூடியதுமான அரசு உனதாகும்.


நண்பனே!
உனது உள்ளமெனும் பூங்காவில் அன்பெனும் ரோஜாவைத் தவிர வேறெதனையும் பயிரிடாதே, நேசம் ஆசை எனும் இராப்பாடிப் பறவையின்பால் உனது பிடியைத் தளரவிடாதே. நேர்மையாளர் நட்பை பாதுகாத்து இறைநம்பிக்கையற்றோர்பால் நட்பு வைக்காதே!
 

அதீதரின் மைந்தனே!
மரணத்தை உனக்கு மகிழ்ச்சியின் தூதனாக ஆக்கியுள்ளோம். நீ ஏன் வருந்துகிறாய்? ஓளியின் பிரகாசத்தினை உன் மீது விழுமாறு செய்துள்ளோம். நீ ஏன் அதிலிருந்து உன்னை மறைத்துக்கொள்கின்றாய்?
 


மனிதனின் புத்திரனே!
நீயே ஒரு பாவியாயிருக்கும் பொழுது மற்றவர்களின் பாபங்களைப் பற்றி மூச்சு விடாதே. இக்கட்டளையை மீறினால் நீ பழிப்பிற்கு ஆளாவாய், அதற்கு யாமே சாட்சியம் கூறுகின்றோம்.
 


மனிதனின் புத்திரனே!
செல்வம் உன்னை வந்தடையுமாயின் களிப்படையாதே; தாழ்வின் தாக்குதலுக்கு ஆளாகும்பொழுதும் துயரங்கொள்ளாதே; ஏனெனில் இவ்விரண்டுமே மறைந்து இல்லாதொழிந்துவிடும்.

 

பஹாவுல்லாவின் புனித வாசகங்கலிருந்து எடுக்கப்பட்ட பொருக்கு மணிகள் சில

பிரபுவே, எனதாண்டவரே, நீர் போற்றவும் மகிமைப்படுத்தவும் படுவீராக! எந்த ஒரு நாவுமே, அதன் விவேகம் எத்துணை ஆழமானதாயினும், உம்மைப் பொருத்தமுற புகழ்ந்திட இயலாதென எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் எவ்வாறு யான் உம்மைக் குறித்துரைக்க இயலும்; அல்லது, மனித மனம் என்னும் பறவையின் பேராவல், எவ்வளவு மிகுதியாயிருப்பினும், எங்ஙனம் அது உமது மாட்சிமை, அறிவு என்னும் விண்ணுலகத்திற்கு உயர்ந்திடுவோம் என நம்பிக்கைக் கொண்டிட இயலும்.

உலகத்தின் மக்களுக்கும் இனங்களுக்கும் விதிக்கப் பட்ட அந் நேரம் இப்பொழுது வந்துவிட்டது. வேத நூல்களில் குறிக்கப் பட்டுள்ளவற்றிற்கிணங்க, இறைவனின் வாக்குறுதிகள் அனைத்தும், நிறைவேற்றப்பட்டுவிட்டன. சையோனிலிருந்து இறைவனின் சட்டம் அறிவிக்கப் பட்டுவிட்டது. ஜெருசலமும் அதனைச் சூழ்ந்துள்ள மலைகளும் அவரது வெளிப்பாட்டின் ஒளியினால் நிரப்பப்பட்டுள்ளன. ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியுமான ஆண்டவனின் திருநூல்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ளவற்றைத், தனது உள்ளத்தினில் வைத்து ஆழச் சிந்திக்கும் மனிதன் மகிழ்வெய்துவான். இறைவனின் அன்புக்குப் பாத்திரமானோரே, இதனைக் குறித்துத் தியானித்து, அவரது திருவாக்கின்பால் கவனங் கொள்வீராக. அதனால் நீங்கள், அவரது கிருபை, கருணை ஆகியவையின் காரணமாக திடப்பற்று என்னும் தெளிவான நீரூற்றிலிருந்து நிரம்பப் பருகி அவரது சமயத்தில் நிலையான, அசைக்கவியலாத பருவதத்தைப் போல் ஆவீராக.

ஐசாயாவின் திருநூலில் எழுதப்பட்டடுள்ளது: "பிரபுவின்பாலுள்ள அச்சத்தினாலும், அவரது மாட்சிமையின் புகழொளியின்பொருட்டும் பாறையினுள் நுழைந்து, புழுதியினுள் உங்களை மறைத்துக் கொள்ளுங்கள்." இத் திருவாசகப் பகுதியினைத் தியானிக்கும் எந்தவொரு மனிதனும் இச் சமயத்தின் உன்னத நிலைதனை அங்கீகரிக்கத் தவறவோ, இறைவனுக்கே சொந்தமான இந் நாளின் மேன்மைமிக்க தன்மையின்பால் சந்தேகங் கொள்ளவோ இயலாது. அத் திருவாசகத்தைத் தொடர்ந்து இவ்வார்த்தைகள் வருகின்றன: "பிரபுவாகிய அவர் ஒருவர் மட்டுமே அந் நாளில் மேன்மைப்படுத்தப்படுவார்." இதுவே, அதி உயரிய எழுதுகோல் எல்லாத் தெய்வீகத் திருநூல்களிலும் மேன்மைப்படுத்தியுள்ள நாள். அவற்றுள் அவரது தெய்வீகத் திருநாமத்தின் மகிமையினைப் பிரகடனஞ் செய்யாத வாசகமே கிடையாது. மேன்மைமிக்க இக் கருப்பொருளின் உயர்வுக்குச் சாட்சியமளிக்காத நூலே கிடையாது. இத் தெய்வீக நூல்களிலும், திருவாசகங்களிலும் இவ் வெளிப்பாடு குறித்து கூறப்படுள்ள அனைத்தையும் யாம் எடுத்துரைக்க முயல்வோமாயின், இந்நிருபம் அளவுக்கு மீறி நீண்டுவிடும். இந்நாளில், ஒவ்வொரு மனிதனும், இறைவனின் எண்ணிறந்த வள்ளன்மைகளில் தனது முழு நம்பிக்கையையும் வைத்து, மிகுந்த விவேகத்துடன் எழுந்து, இச் சமயத்தின் மெய்க்கூற்றுகளைப் பரப்ப வேண்டியது கடமையாகின்றது. அப்பொழுதுதான் அவரது வெளிப்பாடு எனும் காலை ஒளி, இவ்வுலகம் முழுவதையும் சூழ்ந்திடும்.

எவரது நாமத்தின் உச்சரிப்பின் போது மண்ணுலகின் அணுக்கள் எல்லாம் நடுக்கமுறச் செய்யப் பட்டனவோ, எவரது அறிவினுள் உறையிடப்பட்டும், வல்லமை என்னும் கருவூலத்தினில் மறைத்தும் வைக்கப்பட்டுள்ள அதனை வெளிப்படுத்திட உன்னதத்தின் நா உந்துதல் பெற்றதோ, அவர், மனித இனம் அனைத்தின் பிரபுவான அவர், புனிதப்படுத்தப் படுவாராக. வல்லமைமிக்கவர், எல்லாம் வல்லவர், அதி உயர்வானவர் என்னும் தனது பெயரின் வலிமையின் வாயிலாக, மெய்யாகவே, அவர் விண்ணுலகங்களின் மீதும் மண்ணுலகத்தின் மீதும் உள்ள அனைத்திற்கும் ஆட்சியாளராவார்.

மனிதர்களே, தெய்வீக நீதியின் நாள்களின் வருகையினை எதிர்பார்க்கும் பொருட்டு நீங்கள் உங்களை எழுச்சிபெறச் செய்து கொள்வீராக; ஏனெனில், வாக்களிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டது. கவனமாயிருங்கள், இல்லையெனில், அதன் முக்கியத்துவத்தினை உணரத் தவறி, தவறிழைப்போரின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டிடப் போகின்றீர்.

கடந்த காலத்தை எண்ணிப்பாருங்கள். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித உருவில் இறைவனுடைய அவதாரங்களின் வருகைக்காக உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் உட்பட, எல்லாக் காலங்களிலும், எத்தனைப் பேர் ஏக்கத்தோடு காத்திருந்துள்ளனர். எத்துணை முறை அவரது வருகையை எதிர்பார்த்திருந்தனர். இறைவனின் கருணை என்னும் தெய்வீகத் தென்றல் வீசி, வாக்குறுதியளிக்கப்பட்ட திருவழகு, தமது மறைவுநிலை என்னும் திரைக்குப் பின்புறத்திலிருந்து வெளிவந்து உலகத்திற்கெல்லாம் காட்சியளிக்க வேண்டும் என்று எவ்வாறு அவர்கள் அடிக்கடி பிரார்த்தித்து வந்துள்ளனர். ஆனால், அருட்கதவு திறந்து, தெய்வீக வள்ளன்மை எனும் மேகம் மனித இனத்தின்பால் பொழிந்து, பார்வைக்கப்பாற்பட்டவரின் ஒளி விண்ணுலகச் சக்தியெனும் அடிவானத்தில் ஒளிர்ந்த உடனேயே, அவர்களெல்லாரும் அவரை மறுத்து, அவரது திருமுகத்திலிருந்து, அதாவது இறைவனின் திருமுகத்திலிருந்தே, அப்பால் திரும்பிக்கொண்டனர்.........

சிந்திப்பீராக; அத்தகைய செயல்களுக்குரிய நோக்கம் எதுவாக இருந்திருக்கக் கூடும்? சர்வ மகிமையாளருடைய அழகின் வெளிப்பாட்டாளர்களின் மீது அத்தகைய நடத்தையை மேற்கொள்வதற்கு அவர்களைத் தூண்டியது எதுவாக இருந்திருக்கக் கூடும்? கடந்த காலங்களில் அம் மக்களது மறுப்புக்கும், எதிர்ப்புக்கும் எதுவெல்லாம் காரணமாயிருந்ததுவோ, அதுவே, இப்பொழுது இக் காலத்திய மக்களின் நெறிபிறழ்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது. கடவுளுக்கான சாட்சியம் பூரணமற்றது, எனவே மக்களது மறுப்புக்கு அதுவே காரணமாக அமைந்தது என வாதிடுவது வெளிப்படையான தெய்வ நிந்தனையாகும். அவர், தனது படைப்பினங்களின் வழிகாட்டலுக்காக அனைத்து மனிதர்களின் மத்தியிலிருந்து ஓர் ஆன்மாவைத் தனித்துத் தேர்வுசெய்து, ஒரு புறத்தில், அவரது தெய்வீக சாட்சியத்தினைப் பூரணமாக அவருக்கு வழங்காது தடுத்துவிட்டு, மறுபுறத்தில் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவரிடமிருந்து அப்பால் திரும்பியதற்காக அவரது மக்களைக் கடுமையாகத் தண்டிப்பதானது சகல வள்ளன்மையாளரின் கிருபையிலிருந்தும் அவரது அன்பான தெய்வீகம், மென்மைமிகு கிருபை ஆகியவற்றிலிருந்து எந்தளவு தூரமான ஒன்று! இல்லை, அனைத்து உயிரினங்களின் பிரபுவரின் அளவிறந்த கொடைகள் எல்லாக் காலங்களிலும் அவரது தெய்வீக சாராம்சத்தின் அவதாரங்களின் வழி மண்ணுலகையும், அதில் வாழும் அனைத்தையும் சூழ்ந்து வந்துள்ளன. அவரது கிருபை மனிதகுலத்தின் மீது பொழிவதிலிருந்து ஒரு கணங்கூட நிறுத்தி வைக்கப்படாததும் அன்றி, அவரது அன்புப் பரிவு என்னும் மழை அதன் மீது பொழிவதிலிருந்து தடுக்கப்படவுமில்லை. முடிவாக, ஆணவம், செருக்கு என்னும் பாதையில் பயணம் செய்து, தொலைவு என்னும் வனாந்தரத்தில் அலைந்து, தங்களது வீண் கற்பனையில் மூழ்கி, தங்களது சமயத் தலைவர்களின் அதிகாரத்திற்கிணங்க, நடந்திடும் அற்ப சிந்தனை கொண்ட ஆன்மாக்களைத் தவிர வேறெவருக்கும் அத்தகைய நடத்தை உரியதாகாது. வெறும் எதிர்ப்பே அவர்களது தலையாய நோக்கமாகும்; அவர்களின் ஒரே ஆவல் உண்மையை அலட்சியப்படுத்துவதே. மெய்ம்மைச் சூரியனின் அவதாரங்கள் ஒவ்வொருவரின் நாள்களிலும் இம் மனிதர்கள், தாங்கள் பார்த்து, கேட்டு, உணர்ந்திருந்த சகலவற்றிலிருந்தும் தங்களின் கண்களையும், செவிகளையும் தூய்மைப்படுத்தியிருப்பின், உண்மையாகவே அவர்கள் இறைவனது பேரழகைக் கண்ணுறும் பாக்கியத்தை இழந்திருக்கவும் மாட்டார்கள் என்பதுவும், மகிமை என்னும் மாளிகையிலிருந்து வெகுதூரம் சென்றிருக்கவும் மாட்டார்கள் என்பது பகுத்துணரக் கூடிய ஒவ்வொரு பார்வையாளருக்கும் தெளிவாய்த் தெரிவதுடன் நன்கு புலப்படவும் செய்யும். ஆனால், இறைவனுடைய சாட்சியத்தைத் தங்களது சமயத் தலைவர்களின் போதனைகளிலிருந்து பெற்றுள்ள அறிவின் துணைகொண்டு ஒப்பிட்டுப் பார்த்து, அது தங்களது குறுகிய புரிந்துகொள்ளலுக்கு மாறுபட்டிருந்ததன் காரணமாக அத்தகைய கேடுநிறைந்த செயல்களைப் புரிந்திட முன்னெழுந்தனர்.

நாமங்கள் அனைத்திற்கும் பிரபுவும், விண்ணுலகங்களைப் படைப்போனும் ஆகியவரே, உமது நாளின் - உலகம் முழுமைக்கும் வழிகாட்டுதல் எனும் விளக்கும், அதனில் வாழும் யாவருக்கும் பண்டைய நாள்களின் அடையாளமும் ஆகிய, அந்நாளின் - மகிமைகளை அறிந்து கொள்வதிலிருந்து எந்தத் திரையும் என்னைத் தடுத்திட நான் அனுமதித்ததில்லை. உம்மிடமிருந்து உமது உயிரினங்களின் கண்களை மறைத்திட்டுள்ள திரைகள்தாம் என் மெளனத்திற்குக் காரணம்; உமது மக்களை உமது மெய்ம்மையைக் கண்டுகொள்வதிலிருந்து தடுத்திட்டுள்ள இடையூறுகளே எனது ஊமைநிலைக்குக் காரணம். என்னுள் இருப்பது யாதென நீர் அறிவீர், ஆனால் உம்முள் இருப்பது யாதென யான் அறியேன். நீரே சகலமும் அறிந்தவர், அனைத்தும் அறிவிக்கப் பட்டவர். நாமங்கள் அனைத்தையும் விஞ்சிடும் உமது நாமம் சாட்சியாக! உமது மேலதிகார, சகலத்தையும் நிர்ப்பந்திக்கவல்ல கட்டளை என்னை வந்து சேருமாயின், உமது பேரொளி என்னும் இராஜ்யத்தில், உமது சக்தியெனும் நாவினால் கூறக் கேட்கப் பட்ட அது உமது மேன்மைப் படுத்தப் பட்ட திருச்சொல்லின் மூலம், எனக்கு, மனிதர்களின் ஆன்மாக்களை மீண்டும் உயிர் பெறச் செய்திட அதிகாரமளித்திடும். மனிதர்களின் கண்களிலிருந்து மறைக்கப் பட்டுக் கிடக்கும் அது, துலங்கிடும், ஒப்புயர்வற்ற பாதுகாவலரான, சுயஜீவியான உமது நாமத்தின் பெயரால் வெளிப்படுத்தப் பட்டுள்ள அதன் மூலமாக, எனக்கு, உமது சுடரொளி வீசும் வதனத்தின் வெளிப்பாட்டினை அறிவித்திட உதவிடும்.

 

 

 

Û