கலியுக முடிவும் கல்கி அவதாரமும்
கிருஷ்னர், கல்கி எனும் விஷ்னுவின் 10வது அவதாரமாக பூமியில் அவதரிப்பார் என்பது ஐதீகம். அவர் எப்போது, எங்கே எப்படி தோன்றுவார் என்பன போன்ற கேள்விகளுக்கு புரானங்களும் இதிகாசங்களும் விளக்கமளிக்கின்றன. அவற்றை வாசகர்களின் பரிசீலனைக்கு இங்கு தொகுத்தளிக்கின்றோம்.
முதலாவதாக பகவத் கீதையில் காணக்கிடக்கும் விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றிய செய்யுட்களை காண்போம்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
यदा यदा हि धर्मस्य ग्लानिर्बवति भारत।
अब्य्त्तानमधर्मस्य तदात्मानम् सृजाम्यहम्॥
பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
परित्राणाय सादूनाम् विनाशाय च दुश्कृताम् ।
धर्मसम्सापणार्ताय सम्बवामि युगॅ युगॅ॥
அதாவது எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்போதெல்லாம் இறைவன் ஓர் ஆன்மாவை, அதாவது அவதாரத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த அவதாரம் யுகங்களுக்கிடையில் பூமியில் தோன்றி நல்லவர்களைப் பாதுகாத்து, கொடியவர்களை அழித்து புதிய தர்மம் ஒன்றை நிலைப்படுத்திடச் செய்கின்றது.
இதை மேலும் விரிவாகக் காண்போம்:
கல்கி அவதாரம் என்பது கிருஷ்ன பரமாத்மாவின் மறுவருகையை குறிப்பதாகும். இந்த அவதாரம் தோன்றக்கூடிய காலம் இடம் போன்றவை புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன, மற்றும் தோன்றக்கூடிய இடம் பற்றிய வர்ணனையையும் கல்கி புராணத்தில் காணலாம்.
இடம் பெயர் பற்றிய கூற்றுகள்.
ஸம்பலக்ராம: முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன:
பவனே விஷ்னுயஸஸ: கல்கி ப்ராதுர் பவிஷ்யதி
सम्भलग्रम: मुक्य्स्य ब्राह्मनस् य् महात्मन:।
बवने विश्णुयशस: कल्कि प्रातुर् बविश्यति॥
அதாவது, சம்பலக்கிராமத்தில் முக்கியஸ்தராக விளங்கும் ஒருவருடைய இல்லத்தில் கல்கி அவதரிப்பார் என்பது இதன் பொருள். ரஷ்ய நாட்டைச் சார்ந்த ரோரிச் எனும் சம்ஸ்கிருத பண்டிதர் சம்பல் என்பது லெளகீகமான ஓர் இடமல்ல ஆனால் ஆன்மீகமும் லெளகீகமும் ஒன்று சேரும் ஓரிடம் என மஹாபோதி, ஏப்ரல் 1948எனும் சஞ்சிகையில் கூறியுள்ளார். இது இறைவனின் அவதாரங்களின் இயல்புகளான ஆன்மீகத்தையும் லெளகீகத்தையும் ஒருங்கினைப்பதை குறிப்பதாகும். அதே வேளையில் கல்கி புரானத்தில் சம்பலக்கிராமத்தின் லெளகீக வர்ணனையும் காணக்கிடக்கின்றது. சற்று ஆச்சரியப்படும் வகையிலேயே அவ்வர்ணனை அமைந்துள்ளது. கல்கி புரானத்தின் 2வது அம்சம் 6வது அத்தியாயத்தில் இவ்வர்ணனையைக் காணலாம்.
மேற்கண்டவற்றிலிருந்தும் புரானங்களில் மேற்கொண்டு காணப்படுவனவற்றையும் கொண்டு பின்வரும் பட்டியலை உருவாக்கலாம்:
இறைவன் உலகில் தர்மத்தை நிலைப்படுத்த காலத்திற்குக் காலம் தமது அவதாரம் ஒன்றை பூமிக்கு அனுப்புகின்றார். இந்த அவதரிப்பு யுகங்களின் சந்திப்பின் போது நிகழுகின்றது. விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கல்கி பூமியில் தோன்றவிருக்கின்றார் இந்தத் தோற்றம் கலியுகத்தின் முடிவில் உண்டாகும் கல்கி, சம்பல் எனும் கிராமத்தில் விஷ்னுயாஷா என்பவருக்கு மகனாக பிறப்பார்
இப்போது கலி எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும் என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாண முயலுவோம்.
இன்று இந்தியாவின் பல பாகங்களிலும் பலவிதமான காலன்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் கலியுக வருடம் மற்றும் கிருஷ்னர் வருடம் எனும் இரண்டு நமக்கு முக்கியமானவையாகும். கலியுக காலன்டர் கலியுகம் பிறந்ததிலிருந்து தொடக்கம் கண்டது. கிருஷ்னர் வருடம் கிருஷ்னர் பிறந்ததிலிருந்து தொடங்கியது. இந்தியாவில் இவ்வருடங்கள் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன. கலியுகம் தற்போது (ஆங்கில வருடம் 2004ல்) தனது 5104வது வருடத்தை அடைந்துவிட்டிருக்கின்றது. கிருஷ்னர் வருடம் அதன் 5229 வருடத்தில் காலடியெடுத்து வைத்துள்ளது. இவை இரண்டுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. கலியுகம் கிருஷ்னர் வின்னேற்றம் அடைந்த தருனத்திலிருந்து ஆரம்பித்தது என புரானங்கள் கூறுகின்றன. ஆகவே கிருஷ்னர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் (5229 - 5104) 125+ வருடங்களாகும். இங்கு கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் யாதெனில், இந்த இரண்டு வருடக்கணக்குகளும் 355 நாட்கள் கொண்ட சந்திர ஆண்டுகளாகும். சூர்ய வருடமென்பது 365Ό (365.25) நாட்களாகும். விக்கிரமாதித்தர் காலத்திற்கு பிறகே சூர்ய வருடம் மக்களிடையே நடைமுறைக்கு வந்தது. புரானங்ளிலும் மனுஸ்மிருதியிலும் யுகங்களின் காலவரை திவ்ய வருடம் எனும் சூரிய வருடத்தையே பின்பற்றி கணிக்கப்பட்டுள்ளது. கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றுமொரு விஷயம் என்னவென்றால், எந்தக் காலன்டரும் ஆரம்பிக்கும் போது வருடம் 0 என ஆரம்பிப்பதில்லை. உதாரனமாக வழக்கில் இருக்கும் ஆங்கில வருடம் வருடம் 1 எனவே ஆரம்பித்தது.
புராணங்கள், இதிகாசங்கள், மனுஸ்மிருதிகள் ஆகியவற்றில் காலத்தை பிரம்ம வருடங்கள், சதுர்யுகங்கள், யுகங்கள், வருடங்கள் என பிரித்திருப்பதைக் காணலாம். மேற்குறிப்பிட்டுள்ளது போல் இவ்வருடங்கள் திவ்ய வருடங்களெனும் சூர்ய வருடங்களாகும். விஷ்ணுவின் அவதாரங்கள் யாவும் யுகங்களின் முடிவிலேயே தோன்றியுள்ளன. உதாரணமாக இராமர் த்ரேதா யுகத்தின் முடிவிலும், கிருஷ்னர் த்வாபர யுகத்தின் இறுதியிலும், அதாவது யுகங்களின் சந்தியாம்ச காலங்களில் தோன்றினர். கல்கி அவதாரம் கலி யுகத்தின் முடிவில் தோன்றவேண்டும். இந்த கலி யுக முடிவு எப்பொழுது நேரும் என்பதைக் காணும் முன் யுகங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன என்பதைக் காண்போம். பின்வரும் அட்டவனையைக் கவனிக்கவும்:
|
யுகம் |
சத்யயுகம் | துவாபரயுகம் | த்ரேதாயுகம் | கலியுகம் |
| சந்தி+யுகம்+சந்தியாம்சம் | 100+1000+100 | 200+2000+200 | 300+3000+300 | 400+4000+400 |
தற்போது, கலி யுகத்திற்கு 432,000 வருடங்கள் எனும் கருத்து நிலவுகின்றது. இது ஒரு தவறான கணிப்பாகும். இதற்கு காரணம் சமஸ்கிருத செய்யுட்களில் என்களை எழுதும் விதமே ஆகும். பின்வரும் செய்யுளை கவனிக்கவும்:
சத்வாரி(4) த்ரீனி(3) த்வே(2) சைகம்(1) க்ருதாதிஷு யதாக்ரமம்
சம்க்யாதானி ஸஹஸ்ரானி(1000) த்விகுனானி ஸதானி ச
முதல் வாக்கியத்தில் எண்களைக் குறிப்பிடும் போது நான்காயிரம், மூவாயிரம், இரண்டாயிரம், மற்றும் ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் சம்ஸ்கிருத செய்யுட்களில் என்களின் வரிசை அங்கானாம் வாமதோ கதி எனும் விதிக்கேற்ப 1, 2, 3, மற்றும் 4 என எழுதப்படாமல் 4, 3, 2, மற்றும் 1 என எழுதப்பட்டுள்ளது. இது கலியுகத்திற்கு 1200 சூர்ய வருடங்கள் எனும் தவறான கருத்தை ஏற்படுத்தி, கணக்கு சரியாக வராததால் சூர்ய வருடமான திவ்ய வருடம் தேவர்களின் வருடமான தைவ்ய வருடமாக கணிக்கப்பட்டு ஒரு தேவ வருடம் 360 மனித வருடங்களுக்குச் சமமானதால், 1200ஐ 360ஆல் பெருக்கி, கலியுகத்திற்கு 432,000 வருடங்கள் என கூறப்பட்டுள்ளது. நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என செய்யுட்களில் காணப்படும்போது அவை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என படிக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே கலி யுகத்திற்கு 4800 வருடங்கள் என்பதற்கு பதிலாக 432,000 வருடங்கள் என தவறாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு யுகத்துக்கும் சந்தி மற்றும் சந்தியாம்சம் எனும் முன் பின் இணைப்புக்காலங்கள் உள்ளன. இராமர் துவாபர யுகத்தின் சந்தியாம்சத்திலும், கிருஷ்னர் த்ரேதா யுகத்தின் சந்தியாம்சத்திலும் தோன்றினர். கல்கி அவதாரம் கலி யுகத்தின் சந்தியாம்ச காலத்தில் நடக்க வேண்டும். கலி யுகம் கிருஷ்ணர் விண்ணேற்றம் அடைந்த மறுகனமே பூமியில் தோன்றிவிட்டதென புரானங்கள் அறிவிக்கின்றன.
வியாசர் தீர்க்கதரிசி. கலியுகத்தின் தேய்வுக்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை அவர் அப்போதே தீர்க்கதரிசனமாக கண்டார். இப்போது நடக்கும் சம்பவங்களை அவர் அப்போதே படம் பிடித்தாற் போன்று வர்ணித்துள்ளார். வருங்காலத்தைப் பற்றியும் காலங்கள் பற்றியும் அவர் கூறும்போது வழச்கிலிருந்த சந்திர வருட கணக்குகளைக் காட்டிலும் வருங்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்படப்போவதும், புரானங்களில் அப்போதே குறிப்பிடப்பட்டுள்ள திவ்ய வருடமான சூர்ய வருடத்தையே தமது காலக்கணிப்பிற்கு பயன்படுத்தியுள்ளார். அக்காலத்தில் மாதங்களைக் கூட வருடங்கள் என கூறும் வழக்கம் இருந்துள்ளது. ஆகவே, யுகங்கள் என கூறும்போது அவற்றை சூர்ய வருடங்களின் அடிப்படையிலேயே காணவேண்டும்.
சரி, இப்போது கலி யுகம் எப்போது முடிவுற்றிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். கலியுகத்திற்கு இதுவரை (நவம்பர் 2004 வரை) 5103.58 வருடங்களாகியுள்ளது (5104வது வருடம் மார்ச் 2004ல் ஆரம்பித்தது. ஏற்கனவே கூறியது போல், முதல் வருடத்தை 0 வருடம் எனக்கொள்ளாமல் வருடம் 1 எனக்கொண்டு கணக்கிடும்போது கலியுகத்திற்கு 5103.58 வருடங்கள் ஆகிவிட்டன). இந்த 5103.58 சந்திர வருடங்களை சூர்ய வருடங்களாக மாற்றிப்பார்ப்போம்: (5103.58 x 355) / 365.25 = 4960.36 சூர்ய வருடங்களாகும். ஆனால் கலி யுகத்திற்கு 4800 சூர்ய வருடங்கள்தான் என கணக்கிட்டால் கலியுகம் (4960.36 - 4800 = 160.36) வருடங்களுக்கும் முன்பே முடிவுற்றிருக்க வேண்டும், அதாவது (2004.83 - 160.36 = 1844.47) லேயே அது முடிவுற்றிருக்க வேண்டும். இதில் பெரும் விசேஷம் என்னவென்றால் பல கிருஸ்தவ பிரிவுகள் இயேசு நாதரின் மறுவருகை இந்த ஆண்டிலேயே நடக்கும் என போதித்துள்ளன. இஸ்லாமிய சமயத்தில் ஹிஜ்ரி 1260ல், அதாவது அதற்கு சமமான ஆங்கில வருடம் 1844ல் இதே போன்ற ஒரு தூதர் தோன்றுவார் எனும் நம்பிக்கையும் உள்ளது. இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸூரதாஸர் எனும் ஞானி விக்கிரமாதித்த வருடம் 1900க்குப்பின் உலகில் ஒரு பெரும் நிகழ்வு உண்டாகும் என போதித்துள்ளார். விக்கிரமாதித்த வருடம் ஆங்கில வருடத்திற்கு 56 வருடங்கள் அதிகமாகும். ஆகவே 1900 - 56 = 1844ல் இம் மாபெரும் நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும். ஆக, கிபி 1844 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், உலக சமயங்களுக்கு பொதுவான அவதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வருடமும் ஆகும். வள்ளலார் இராமலிங்கர் கலி யுகம் 1900ஆம் வருடத்திற்கு முன்பே முடிவுறும் என கூறி பின் வரும் செய்யுளையும் பாடியுள்ளார்:
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடுந் தனித்தலைவ ரொருவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே
ஓர் அவதாரம் உலகில் தோன்றுவது ஒரு குறிப்பிட்ட இனத்திற்காகவே அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள மக்களுக்காகவே என கூறுவது தவறாகும். எந்தவோர் அவதாரமும் ஒருதலை பட்சமாக அவதரிப்பதில்லை. எவ்வாறு இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவராக இருக்கின்றாரோ அவ்வாறே அவரது அவதாரங்களும் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள். அவர்களை அவ்வாறு கண்டறிந்து ஏற்றுக்கொள்வது மனிதர்களின் கடமையாகும்.. ஆகவே, ஓர் அவதாரம் இங்கு மட்டும்தான் தோன்றுவார் அல்லது அங்கு மட்டும்தான் தோன்றுவார் எனக் கூறுவது ஏற்புடையதாகாது. இறைவன் படைத்த உலகமிது. அவர் விரும்புகின்றபடி அவர் தமது அவதாரத்தை எங்கு வேண்டுமானாலும் தோன்ற செய்யலாம். அதே ரீதியில் கல்கி அவதாரம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் என நிச்சயமாக கூறிடவும் முடியாது. கிருஷ்னர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்றொரு நாடு கிடையாது. பாரதம் முழுவது 56 தேசங்கள் இருந்ததாக புரானங்கள் கூறுகின்றன.
பஹாய் சமயம் 1844ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி பாரசீக நாட்டில் தோற்றம் கண்டது. பாப் என்பார் முன்னோடியான அவதாரமாகவும், அவரையடுத்து பஹாவுல்லா என்பார் இறைவனின் முழு அவதாரமாகவும் தோன்றினர். பஹாய்கள் பஹாவுல்லா நிச்சயமாகவே கல்கி விஷ்ணு யாஷா, இயேசு நாதரின் மருவருகை, புத்தரின் மறுவருகையான மைத்ரேயி அமிதபா, யூதர்களின் மெஸ்ஸையா என நம்புகின்றனர். பஹாவுல்லா எனும் பெயரின் அர்த்தம், இறைவனின் (ஜோதி/மகிமை/ஒளி) என்பதாகும். சம்ஸ்கிருத மொழியில் விஷ்ணுயாஷாஎனவும், ஆங்கிலத்தில் Glory of God" எனவும் மொழி பெயர்க்கலாம். புத்த சமயத்தின் புத்தரின் ஐந்தாவது அவதாரத்தின் பெயரான அமிதபா என்பதன் அர்த்தமும் ஏறக்குறைய இதுவே அகும். அதாவது, அமித என்றால் அளவிடமுடியாதது அல்லது அதி உயர்ந்தது, பா என்றால் (ஜோதி/மகிமை/ஒளி) என்பதாகும்.
இறுதியாக,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
பஹாவுல்லாவின் போதனைகளில் மிக அடிப்படையான போதனை ஒன்று தன்னிச்சையாக உண்மையை ஆராய வேண்டும் என்பதாகும். இங்கு பகிர்ந்தகொள்ளப்பட்டுள்ள விஷயங்கள் யாவும் வாசகர்களின் சிந்தனையை தூண்டிவிடுவதற்காகவே அளிக்கப்பட்டுள்ளன. ஆராய்ந்து உண்மையை கண்டறிவது அவரவர் கடமை.